Monday, November 10, 2025

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண.... #திருப்புகழ்

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென . முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்  பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக' என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ
 ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர் செய்யவல்ல பெருமாளே.

குறிப்பு:

முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.

* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார்.

** அஷ்ட பைரவர்கள்: அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்.

Gather rich knowledge, let it flood your mind

Knowledge echoes all around you... Simply listen, and inhale it in... Breathe, think, feel, decide, and act... This simple sequence, let it...