Sunday, August 3, 2025

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்துநாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

                 

கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கணவு கண்டாள்; தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள்  வைக்கப்பட்டுள்ளன. திருமணப்பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைப் பாணிக்கிரகணம் செய்துகொள்கிறான். கையைப் பிடித்துக்கொண்டு தீ வலம் வருகிறான். என் காலைப் பிடித்து அம்மியின்மேல் எடுத்துவைக்கிறான். இவை எல்லாம் விரைவிலேயே நிறைவேறக் கண்ணன் அருள்வானோ! என்று தோழியிடம் கூறி மகிழ்கிறாள். பகவானுக்கு இடாத அன்னமும், வாரணமாயிரம் அனுஸந்திக்காத திருமணமும் பயனற்றவை. ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் திருக்கல்யாணம் என்றே சொல்லலாம். கல்யாணத்தில் சீர் பாடல் கட்டத்தில் வாரணமாயிரம் அனுஸந்திப்பது வழக்கம். இப் பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்

1.வாரணம் ஆயிரம்

கண்ணன் கோதையை மணம்புரிய, ஆயிரம் யானைகள் புடைசூழ நகர் வலம் வருதல்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

கோதையைத் திருமணம் செய்துகொள்ளக் கோவிந்தன் மணக்கோலம் கொண்டு வருகிறான். அப்படி வரும்போது அவனைச் சுற்றி ஓராயிரம் யானைகள் உடன் வருகின்றன. அவனை அந்த ஊரே பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கிறது. இவ்வாறு கண்ணன் மணப்பந்தலுக்கு வரும் அழகையும் கம்பீரத்தையும் தோழியிடம் சொல்லிப் பூரிக்கிறாள் கோதை.

2.நாளை வதுவை மணம்

மணப்பந்தலில் மாதவன் பிரவேசித்தல்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

தோழீ, “நாளைய தினம் கண்ணனுக்கும் ஆண்டாளுக்கும்  திருமணவிழா” என்று நாள் நிச்சயித்துப் பின்னர் விவாகத்தின் முதல்நாள் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வதற்காகப், பாளையோடு கூடிய பாக்கு மரங்களால் அலங்காரம் செய்யப்பட்ட மணப்பந்தலின் கீழே, நரசிம்மன், மாதவன், கோவிந்தன் என்னும் திருநாமங்கள் உடைய கண்ணன் என்னும் இளங்காளை போல்வான் பிரவேசிக்க நான் கனாக் கண்டேன்.

3. இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம்

இந்திரன் முதலிய தேவர்கள் மகள் பேசி மந்திரித்தல்.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து மந்திரக்கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

தோழீ, கண்ணனுக்கும் எனக்கும் நடக்கும் திருமணத்தைக் காண, இந்திரன் முதலிய தேவர்கள் மாப்பிள்ளை வீட்டாராக இந்தப் பூவுலகத்துக்கு வந்திருந்து, கண்ணனுக்கு மணமகளாக என்னைத் தரும்படி கேட்டு நிச்சயித்தனர். அதன்பின், கண்ணனின் உடன் பிறந்தாளான துர்க்கை எனக்குத் தூயதான புதிய ஆடையை உடுத்தி வாசனையுள்ள மலர்மாலையும் அணிவித்தாள், இவ்வாறு கனாக் கண்டேன்.

4. நாற்றிசைத் தீர்த்தம்

தீர்த்தம் நல்கிக் காப்பு நாண் கட்டுதல்.

நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்றன்னை காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

தோழீ, அந்தணர்கள் பலர் சேர்ந்து, நான்கு திசைகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட புண்ணியத் தீர்த்தங்களை நன்றாக எங்கள்மீது தெளித்து, மந்திரம் சொல்லி வாழ்த்தினர். பின்னர் பலவகை மலர்களாலான மாலையணிந்த தூயோனான கண்ணனுக்கும் எனக்கும் காப்புக் கயிறு கட்டினர். இந்நிகழ்வுகளை நான் கனவில் கண்டேன்.

5. கதிரொளி தீபம்

மாப்பிள்ளை அழைப்பும் மணமேடை புகுதலும்.

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

தோழீ, பெருமை வாய்ந்த அழகினையுடைய இளம் பெண்கள் சூரியனது ஒளிபோன்ற பேரொளியுள்ள குத்துவிளக்குக்களையும் பொற்கும்பங்களையும் கையில் ஏந்தி, எதிர்கொண்டு அழைத்துவர, வடமதுரையின் மன்னனாகிய கண்ணன் பாதுகைகளைத் தரித்துக்கொண்டு பூமியெங்கும் அதிரும்படியாக மணமண்டபத்தில் எழுந்தருளுவதை நான் கனவில் கண்டேன்.

6. மத்தளம் கொட்ட

மத்தளம் கொட்டக் கைத்தலம் பற்றுதல்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

தோழீ, மத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கவும் வரிகளையுடைய சங்குகள் ஒலிக்கவும், மைத்துனன் முறையுடையவனும் நற்குணங்கள் நிறைந்தவனும் மதுசூதனன் என்னும் பெயர் பூண்டவனுமான கண்ணன், முத்து மாலைகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழே வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டருள நான் கனாக் கண்டேன்.

7. வாய்நல்லார்

கோதையின் கைப்பற்றிக் கேசவன் தீவலம் வருதல்.

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக் காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித் தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

தோழீ, வாய்மையுடைய நல்ல வேதியர்கள், பொருத்தமான சிறந்த வேத மந்திரங்களை ஓத, அந்தந்தக் காரியங்களுக்கு இசைந்த மந்திரங்களின்படி, பசுமையான இலைகளையுடைய நாணல் புற்களைப் பரப்பிச், சமித்துக்களையிட்டுத் தீ வளர்க்க, மிக்க சினத்தையுடைய பெருங்களிறு போன்ற கம்பீரம் கொண்ட கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அத்தீயினை வலமாகச் சுற்றிவர நான் கனாக் கண்டேன்.

8. இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்

திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிப்பித்தல்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

தோழீ, இப்பிறப்பிற்கும் இனிவரும் ஏழேழ் பிறவிக்கும் பற்றுக் கோடாய் அடைக்கலம் தருபவனும் நம்மையெல்லாம் தனது உடைமையாகக் கொண்டவனும் சகல நற்குணங்களுடையவனும் நாராயணனுமான கண்ணன், சிறந்த தனது திருக்கைகளாலே எனது காலைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்து வைக்க, என்னை அம்மி மிதிக்கச் செய்ய, நான் கனாக் கண்டேன்.

9. வரிசிலை வாள்முகம்

கைமேல் கைவைத்துப் பொரியிடுதல்.

வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

தோழீ, அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளிபொருந்திய முகத்தையுமுடைய எனது தமையன்மார் வந்து அக்கினியை நன்றாக எரியச் செய்து, அந்த அக்கினியின் முன்னே என்னை நிற்கச் செய்தார்கள்; பின்னர், நரசிம்மனாய்ச் சிங்க முகத்தை உடையவனும் அச்சுதனனுமான கண்ணனுடைய திருக்கையின் மேலே என் கையை வைத்து நெற்பொரியை அள்ளியெடுத்து அக்கினியிலிட்டு ஆகுதி செய்வதை நான் கனவில் கண்டேன்.

10. குங்குமம் அப்பி

ஆனைமேல் சென்று மஞ்சனம் ஆடுதல்.

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம்செய்து மணநீர் அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

பாடல் விளக்கம்

தோழீ, குங்குமக் குழம்பை உடலெங்கும் தடவிக், குளிர்ந்த சந்தனச் சாந்தை மிக அதிகமாகப் பூசி, யானையின் மீது கண்ணபிரானோடு சேர்ந்திருந்து, திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட வீதிகளிலே ஊர்வலமாக வந்து, பின்னர் மணம் கமழும் மங்கல நீரினாலே எங்கள் இருவருக்கும் நீராட்டுவதாக நான் கனவில் கண்டேன்.

11. ஆயனுக்காக

ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல் தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்றுமகிழ்வரே !

பாடல் விளக்கம்

வேயர் குலத்தவரால் புகழப்பட்டவராய்த் திருவில்லிபுத்தூருக்குத் தலைவராக விளங்கும் பெரியாழ்வாருடைய திருமகளாகிய ஆண்டாள், தான் கோபால கிருஷ்ணனுக்கு வாழ்க்கைப்பட்டதாகக் கண்ட கனவைக் குறித்து அருளிச்செய்த தூய தமிழ் மாலையாகிய இந்தப் பத்துப் பாடல்களையும் பாராயணம் செய்பவர்கள் நற்பண்புகள் வாய்ந்த சிறந்த பிள்ளைகளைப் பெற்று மகிழ்வார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

மூன்றாம் பிரையில் சிவனின் ஒளி,உள்ளம் திறந்து அவன் நாமம் பாடு

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! மூன்றாம் பிரையில் சிவனின் ஒளி, உள்ளம் திறந்து அவன் நாமம் பாடு, ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! மலையும் கடலு...